''சமச்சீர் கல்வி முறையில் நிதானம் - உறுதி - நிச்சயம் என்ற மூன்று நிலைகளையும் எண்ணி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:
கேள்வி : சமச்சீர் கல்வியை அமல்படுத்துவோம் என்று கூறி மக்களை ஏமாற்றி வருவதாக ஒரு சிலர் பேசுகிறார்களே?
பதில் : இந்தியாவிலேயே முதல் முறையாக தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேதான், "அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம்'' என்று வாக்குறுதி வழங்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக முதல் கட்டமாக பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மருத்துவர் முத்துக்குமரன் தலைமையில் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, அவர்கள் நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பினரோடும் கலந்தாலோசித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றினை அளித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த அறிக்கை சட்டப் பேரவையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து கல்வித் துறையில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரியான எம்.பி.விஜயகுமார் கொண்டு ஒரு நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவிட தமிழ் மாநிலத் திட்டக் குழுவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நபர் குழு அறிக்கை வந்ததும், அதனை நடைமுறைப்படுத்த இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதன் முதற்கட்டமாகத்தான், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு "மெட்ரிகுலேஷன்'' உள்ளிட்ட அனைத்து பாடத் திட்டங்களுக்கும் மொத்த மதிப்பெண்கள் 500 என நிர்ணயம் செய்யப்பட்டு, அதுவும் பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி முறை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்திலே கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே "ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்க மாட்டார்'' என்பதைப் போல தமிழகத்திலே சிலர் அதுபற்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அவசரப்படுகிறார்கள். இது மாணவர்களின் உயிர்ப்பிரச்சினை என்பதால் இதிலே அரசியல் ஆதாயம் தேடுவோருக்கஞ்சி அவசர முடிவெடுக்கக் கூடாது. எனவே, நிதானம் - உறுதி -நிச்சயம் என்ற மூன்று நிலைகளையும் எண்ணி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.