''பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர் ஜாதியில் உள்ள ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்'' என்று உத்தரப் பிரதேச முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மாயாவதி கூறினார்.
சென்னையில் நேற்று இரவு நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில சகோதரத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி பேசுகையில், சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், பா.ஜ. கட்சிகள் இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரிய அளவில் எந்தவித நலத் திட்டங்களையும் செய்துவிடவில்லை. பணக்காரர்களின் உதவியுடன் ஆட்சிக்கு வரும் இவர்கள், அந்தப் பணக்காரர்களுக்குச் சாதகமான திட்டங்களையே வகுத்து வருகின்றனர். இதனால் நாட்டில் ஏழ்மையும், விலைவாசி உயர்வும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
ஆனால், பி.எஸ்.பி. கட்சி, கட்சியின் தொண்டர்களின் பங்களிப்பால் வளர்ந்த கட்சி. வாழ்வில் பின்தங்கிய மக்களுக்கு உதவி செய்வதையே கொள்கையாகக் கொண்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் செய்து தரப்பட்டுள்ளன. ஏழை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி தரப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்கள் வாழ்வில் முன்னேறும் வகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. மேலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள உயர் ஜாதி ஏழைகள் 15 லட்சம் பேருக்கு அரசு விவசாய நிலம் தலா 3 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக உத்தரப் பிரதேசத்தில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர் ஜாதியில் உள்ள ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என்று மாயாவதி கூறினார்.