பிராந்தியக் கட்சிகளின் தந்தை போன்றவர் தமிழக முதல்வர் மு.கருணாநிதி என்று நாகாலாந்து முதல்வர் நிப்யூ ரியோ புகழாரம் சூட்டினார்.
இன்று சென்னை வந்த நாகாலாந்து மாநில முதல்வர் நிப்யூ ரியோ, முதல்வர் கருணாநிதியை அவரின் இல்லத்தில் சந்தித்தார். காலை 9.30 மணி முதல் 9.45 மணி வரை இந்தச் சந்திப்பு நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிப்யூ ரியோ, "நாகாலாந்தில் பிப்ரவரி மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடப்பதால், பிராந்தியக் கட்சித் தலைவர்களில் மூத்தவரான கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றேன்" என்றார்.
மேலும், நாகாலாந்தில் சண்டை நிறுத்தம் அமலில் உள்ளதால் அமைதி நிலவுவதாகவும், தீவிரவாதிகளுடன் அரசியல் ரீதியான பேச்சு தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மியான்மர் பற்றி கூறுகையில், "மியான்மரில் நாகர்கள் 3-இல் ஒருபங்கு உள்ளதால், அவர்களுக்கு மியான்மர் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். இதே கருத்தை மத்திய அரசிடமும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்." என்றார் நிப்யூ ரியோ.