அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்போது உள்ள கூட்டணியே நீடிக்கும் என்று பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
நெல்லையில் அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:
தமிழிசையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக டாக்டர் ராமதாஸ் தொடங்கியுள்ள பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் மூலம் தமிழிசைக்கு தொண்டு செய்த மூலவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விழா எடுத்து வருகிறோம்.
அதன்படி வருகிற 5-ஆம் தேதி ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்கும், 10-ஆம் தேதி வடலூரில் வள்ளலாருக்கும் விழா எடுக்கிறோம். இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ், தமிழ் இசை அறிஞர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளதை திசை திருப்பும் வகையில், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களை வெளியேற்ற கேரளா முயற்சிக்கிறது.
அங்குள்ள தமிழர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கக்கூடாது என்று கேரள அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசும், தமிழக முதல்வர் கருணாநிதியும் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதால், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறமுடியாது. பா.ஜ.க.வின் மதசார்பு கொள்கையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையில் இப்போது உள்ள எங்கள் கூட்டணி தொடரும். இவ்வாறு ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறினார்.