Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெ‌ரியா‌ர் பெய‌ரி‌ல் மேலு‌ம் 100 சம‌த்துவபுர‌ங்க‌ள்: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

பெ‌ரியா‌ர் பெய‌ரி‌ல் மேலு‌ம் 100 சம‌த்துவபுர‌ங்க‌ள்: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

, ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (11:06 IST)
த‌ந்தை பெ‌ரியா‌ர் பெய‌ரி‌ல் தமிழகத்தில் மேலும் 100 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என்று முத‌ல்வர் கருணாநிதி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஈரோ‌‌ட்டி‌ல் நட‌ந்த ‌விழா‌வி‌ல், முதலவர் கருணாநிதி ஈரோடு மாநகராட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

பல ஆண்டுகளுக்கு பிறகு குருகுலத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரக்கூடிய வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சொல்லப்போனால் உணர்ச்சி வசப்படுகிறேன். 60 ஆண்டுகளுக்கு முன்பு எந்த குருகுலத்தில் அறிவு தீட்சியம் பெற உறுதி மேற்கொண்டேனோ, பெரியாரின் வழியில் நடைபெற தொடங்கினேனோ, அந்த குருகுலத்தில் கோலாகலமாக நடைபெறுகின்ற இந்த இனிய விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரியாருக்கு நான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றக்கூடிய வாய்ப்பை பெற்று உங்கள் முன் நான் அமர்ந்து உள்ளேன்.

இங்கு மத்திய அமை‌ச்ச‌ர் இளங்கோவன், கார்வேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். இவர்கள் இருவரும் நமது கூட்டணி கட்சிக்கு துணையாக இருக்கும் உறுப்பினர்கள். கார்வேந்தன் இங்கு பேசும் போது தமிழகத்தில் தொழில் எவ்வாறு வளர்க்கிறது என்று எடுத்துக்கூறினார். கார் தொழில் உலகத்திலேயே பல நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருவதாகவும் கூறினார். தம்பி இளங்கோவன் இங்கு பேசும் போது ஈரோட்டில் அமைந்து இருக்கின்ற மாநகராட்சி கட்டிடத்திற்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் அவ்வாறு குறிப்பிட்டபோது என் நினைவு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றது.

பெரியார் உயிருடன் இருக்கும் போது, பெரியார் திடலில் நடந்த ஒரு விழாவில் நான் கலந்துகொண்டு பேசினேன். அப்போது பெரியார் திடலில் இருந்து அழைப்பு வந்தால் ஓடோடி வந்து கலந்துகொள்வேன் என்று எடுத்து கூறினேன். ஏனென்றால் நான் வெளியில் படுகின்ற வேதனைகளை தீர்த்துக்கொள்ள, அதற்கு மருந்து தேட, எனக்கு ஏற்படுகின்ற புண்களை ஆற்றிக்கொள்ள பெரியார் திடலை நாடுவேன் என்று சொன்னேன்.

அந்த மருந்து என்னுடைய தலைவர் பெரியார் இடத்திலேதான் இருக்கிறது என்றும், அதனால்தான் பெரியார் திடலுக்கு ஓடோடி வருகின்றேன் என்றும் சொன்னேன். அதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் கூறினேன். பாம்பும்-கீரியும் சண்டை போட்டுக்கொள்ளும். அப்படி சண்டை போட்டுக்கொள்ளும்போது, பாம்பில் உள்ள விஷம் கீரியின் உடலில் பரவி இருக்கும். இறுதியாக கீரிதான் வெற்றிபெற்று விடும் என்றாலும், பாம்பின் விஷம் தன்னுடைய உடலில் பாய்ந்து இருக்கும் என்ற அய்யப்பாட்டின் காரணமாக அந்த கீரி ஓடோடி வந்து யாரும் அறியாத ஒரு பச்சிலையில் புரளும். அப்படி பச்சிலை பட்ட காரணத்தினால் அந்த விஷம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை கீரிக்கு உண்டு.

எப்படி பாம்பின் விஷம் தன்னுடைய உடலில் பட்டதும், அதை அகற்ற வேண்டும் என்பதற்காக கீரிப்பிள்ளை தான் நம்புகின்ற ஒரு மூலிகையில் விழுந்து புரளுகின்றதோ அதுபோல நான் வெளியிலே நடத்துகின்ற போராட்டத்தில் என்னை அறியாமல் என் மீது பட்டுள்ள விஷத்தை எல்லாம் போக்கிக்கொள்ள மூலிகையாக இருப்பது பெரியார் திடல்தான். அதனால்தான் பெரியார் திடலுக்கு அடிக்கடி சென்று வருகிறேன் என்று கூறினேன்.

அந்த விழாவில் பெரியார் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு நன்கொடையாக ஆயிரம் ரூபாயை சிலை வைக்கும் நிகழ்ச்சிக்காக வீரமணியிடம் கொடுத்து கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டிய பொறுப்பு உன்னுடைய பொறுப்பு, மணியம்மையின் பொறுப்பு என்று ஒப்படைத்தார்.

பிறகு பெரியார் மறைந்துவிட்ட சில நாட்களுக்கு பின்பு நான் அந்த சிலை வைக்கும் விவகாரத்தை மெல்ல மெல்ல தடுத்து, எனக்கு சிலை வேண்டாம் என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி, அதன் பிறகு அந்த முயற்சி நின்று போனது. அன்றைக்கு பெரியார் சொன்னார் எனக்கு சிலை வைக்க வேண்டும் என்று. இன்றைக்கு பேரன் சொல்கிறார் ஈரோட்டில் கட்டப்படுகின்ற மாநகராட்சி கட்டிடத்துக்கு கலைஞர் பெயரை வைக்க வேண்டும் என்று.

ஈரோடு நகராட்சி நூற்றாண்டு விழாவில் பெரியார் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த முனிசிபாலிட்டி என்னுடைய குடும்ப முனிசிபாலிட்டி என்று கூறியிருக்கிறார். குடும்ப முனிசிபாலிட்டி என்று சொல்லி நிலத்தை அபகரிக்கவும் இல்லை. கட்டிடத்தை எடுத்துக்கொள்ளவும் இல்லை. அதற்கு உரிமை கொண்டாடவும் இல்லை. அந்த அளவுக்கு அந்த முனிசிபாலிட்டி தன்னுடைய உணர்வுகளை ஒருங்கே இணைத்தார் என்பதுதான் அதற்கு பொருள். இது புரியாமல் இன்றைக்கு சிலர் குடும்ப கட்சி என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்ற காட்சியை நாம் காண்கிறோம்.

பெரியார் வழியில் அன்றும் செயல்பட்டேன், இன்றும் செயல்பட்டு வருகிறேன். நான் சாகும் வரை பெரியார் வழியில் செயல்படுவேன். 1917-ம் ஆண்டு பெரியாரின் ஆங்கில எழுத்தின் வாயிலாக குறிப்பிட்டதை நான் கண்கொண்டபோது எப்படி மெய் மறந்தேன் என்பதை தம்பி ஸ்டாலின் இங்கே குறிப்பிட்டார்.

இன்றைக்கு ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்று பெரியார் எழுதிய கையெழுத்தை, கட்டளையாக ஆக்கி இருக்கிறேன் என்றால் என்னைவிட பாக்கியசாலி யார் இருக்க முடியும். யாரிடத்தில் நான் வேலை பார்த்தேனோ, யாரை நான் அய்யா, அய்யா என்று கூறிவந்தேனோ அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்திருப்பது பெரிய பேராக கருதுகிறேன்.

மேலும் 100 சமத்துவபுரங்கள்!

அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் சமத்துவமாக வாழ்கின்ற இடத்தை யார் பெயரால் கட்டினோம் என்றால், பெரியார் பெயரில்தான் கட்டினோம். தற்போது100-க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. எதிர்காலத்தில் மேலும் 100 சமத்துவபுரங்களை பெரியாருடைய பெயரால் தமிழகத்தில் உருவாக்கப்படும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். மேலும் 100 சமத்துவபுரங்கள் வந்தால் போதாது. ஆயிரம் சமத்துவபுரங்கள் வரவேண்டும். தமிழ்நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். இந்தியாவே சமத்துவபுரமாக மாறவேண்டும். இதுதான் தந்தை பெரியார் கண்டகனவு. அந்த கனவை நிறைவேற்றுவோம், நிறைவேற்ற பாடுபடுவோம்.

3 லட்சம் பேருக்கு இலவச நிலம்!

இந்த விழாவில் ஒரு சில உறுதிமொழிகளை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மேடையிலே விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்பட இருக்கிறது. இன்று வழங்கப்படுகின்ற நிலம் 26 ஆயிரத்து 982 ஏக்கர். 17-9-2006 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு 24 ஆயிரத்து 358 பேருக்கு 25 ஆயிரத்து 782 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இன்று ஈரோட்டில் 21 ஆயிரத்து 482 பேருக்கு 26 ஆயிரத்து 932 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது. மொத்தம் நாங்கள் ஆட்சிக்கு வந்த 11/2 ஆண்டுகாலத்தில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 671 ஏக்கர் நிலம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 995 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் தொடர்ந்து ஏழைகளுக்கு இலவச நிலங்கள் வழங்கப்பட உள்ளது. எங்கே நிலம், அதற்கு ஒரு போராட்டம் என்றெல்லாம் ஆர்ப்பரிப்பவர்களுக்காக இந்த புள்ளி விவரத்தை நான் வழங்குகிறேன். 2006-2007 ம் ஆண்டில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டாக்களும், 2007-2008 ம் ஆண்டில் இது வரையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவேண்டும் என்பது குறிக்கோளாகும். இவ்வாறு முதல்வ‌ர் கருணாநிதி பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil