திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் விரைவில் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
திருப்பூரில் இன்று உள்ளாட்சி அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, திருப்பூர் மாநகராட்சியை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்துப் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
இவ்விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
திருப்பூர் நகரம் தொழிலாளர்கள் நிறைந்த தொழில் வளமை மிகுந்த பகுதி. அப்படிப்பட்ட திருப்பூர் நகரம், மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சியில் மேயராக பொறுப்பேற்க உள்ளவர் திருப்பூர் ஜமீன்தாரோ, செல்வசீமானோ அல்லது பணக்காரரோ அல்ல. சாதாரண ஒரு காய்கறி வியாபாரியாக இருந்தவர். பிறகு பனியன் தொழிலாளியாக வேலை பார்த்தார். இதுபோன்று சாதாரண மனிதனையும் உயர் பதவியில் நியமிப்பது புதிதல்ல.
சென்னையில் முதன் முதலாக மாநகராட்சி மேயர் தேர்தல் 1959-ஆம் ஆண்டு நடந்தது. அப்போது மேயராக யாரை போட்டியிட வைப்பது என அண்ணா உள்பட நாங்கள் எல்லோரும் ஆலோசித்தோம். அப்போது அண்ணாவிடம் சென்று தாயார் அஞ்சுகம் அம்மையார் அரசை மேயராக கொண்டு வந்தால் அரசே வரும் என்று கூறினார்.
அரசு என்பவர் சாதாரண தொழிலாளி. சாதாரண நபரை பொறுப்பில் அமர்த்துவது தி.மு.க.வின் சாத்திரம்.
திருப்பூரில் மேயராக பதவி ஏற்க உள்ள செல்வராஜூக்கு வழங்கப்பட்ட செங்கோல் நன்கொடையாக பெறப்பட்டு வழங்கப்பட்டது. அதேபோல் அவருக்கு அணிவிக்கப்பட்ட தங்கசங்கிலியும் நன்கொடையாக பெறப்பட்டு வழங்கப்பட்டது. இதேபோலதான் மேயர் பதவியும் அவருக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
இவரை மேயராக நியமிப்பது மூலம் நானே மேயராக ஆனதுபோல மகிழ்ச்சி அடைகிறேன். திருப்பூர் மாநகராட்சி ஆவதால் மக்களின் சந்தோஷம் எந்த வகையிலும் கெடாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாநகராட்சி உள்கட்டமைப்பு வசதியை விரிவுப்படுத்த அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி அலுவலகம் கட்ட, சாலை வசதி ஏற்படுத்த, பூங்காக்கள் அமைக்க, உயர்மின் கோபுரங்கள் அமைக்க ரூ.5 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சியில் ரூ.40 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
சட்டமன்றத்தில் அறிவிப்பு!
திருப்பூர் மாநகராட்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் நிதிநிலை அறிக்கை வர இருக்கிறது. மேலும் ஆளுநர் உரையும் நடக்க உள்ளது. அது எப்போது நடக்கும் என்று கூறக்கூடாது.
புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்றால் அதற்காக வருவாய் நிர்வாக ஆணையரின் அறிக்கையை பெற வேண்டும். சட்டமன்றம் கூடும் முன் அந்த அறிக்கை பெறப்படும். சட்டமன்றம் கூடும்போதும் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.
திருப்பூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள பகுதிகளிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் அவரது உற்றார் உறவினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அந்த பெண் பருவம் அடையும்போது கண்ணீர் விடுவாள். அதுபோல தற்போது திருப்பூர் மாநகராட்சி ஆனதும் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். ஆனால் பருவம் அடைந்த பெண் கண்ணீர் வடிப்பதுபோல் சுப்பராயன் எம்.பி. தனது கோரிக்கையை கூறியுள்ளார்.
ஒரு பெண் பருவம் அடைந்த பிறகு நேரம் காலம் பார்த்துதான் திருமணம் செய்வார்கள். அதேபோல திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உடனே நிறைவேற்ற முடியாது என்றார் கருணாநிதி.