மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதிலும், வெள்ள நிவாரண உதவிகளை மேற்கொள்வதிலும் தமிழக அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வள்ளுவரின் வாக்குப்படி வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் சொந்த வருமானத்தில் டி.வி. வாங்குவதற்கு வழிவகுக்க வேண்டுமே தவிர, இலவசமாக டி.வி.யை தருவோம் என்று அரசு சொல்வது கோமாளித்தனமானதாகும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "கலர் டி.வி. இல்லாத எல்லா குடும்பங்களுக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும் என்று கருணாநிதி லேட்டஸ்டாக அறிவித்துள்ளார். 2006-07, 2007-08 பட்ஜெட்படி கலர் டி.வி. வழங்க அறிவிக்கப்பட்ட தொகையில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன.
இலவச டி.வி. பெட்டிகளை, அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற கட்சி உறுப்பினர்கள் சேர்ந்துதான் கொள்முதல் செய்ததாக கருணாநிதி தம்பட்டம் அடிக்கிறார்.
ஆனால் டி.வி. பெட்டிகளை கொள்முதல் செய்ய டெண்டர் ஆய்வு செய்ய மட்டுமே கூட்டணி கட்சிகளை பயன்படுத்துவதாகவும், கொள்முதல் வினியோகம் போன்றவற்றில் தங்களை பயன்படுத்துவதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இப்போது வெளிமார்க்கெட்டில் டி.வி.யை விற்பதும், வாங்குவதும் குற்றம் என்று கூறுகிறார்கள்.
ரேஷன் அரிசியில் தரமான அரிசியை அண்டை மாநிலத்துக்கு கடத்துவதை அனுமதிப்பது போல டி.வி. பெட்டி விற்பனையும் நாளடைவில் அனுமதிக்கப்படும். தி.மு.க.வினருக்காக, தி.மு.க. அரசு அமைத்து தரும் மற்றும் ஒரு திட்டமாகும் இது.
கருணாநிதியை பின்பற்றி இலவச கலர் டி.வி., இலவச கோதுமை என்று வாக்குறுதிகளை அள்ளிவீசி காங்கிரஸ் வாக்கு கேட்டது. ஆனால் இதற்கெல்லாம் குஜராத் மக்கள் ஏமாறவில்லை.
தமிழகம் தற்போது கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதுதான் தற்போதைய உடனடி தேவையாகும். இதை நிறைவேற்றாமல் இலவச டி.வி. வழங்கி சாதனை என்று சொல்லி தம்பட்டம் அடிப்பதை ஏற்க முடியாது. எனவே இலவச கலர் டி.வி. திட்டத்தை ஒதுக்கிவைத்து விட்டு மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.