திருப்பூர் மாநகராட்சி தொடக்க விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் முதல்வர் கருணாநிதிக்கு வந்துள்ள கொலை மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதி நாளை திருப்பூரில் புதிய பேருந்து நிலையத்தில் நடக்கும் மாநகராட்சி தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பூர் வருகிறார்.
இந்நிலையில் திருப்பூர் தாசில்தார் சுலோச்சனாவுக்கு நேற்று மர்ம கடிதம் ஒன்று வந்தது.
அதில், "தமிழக அரசு காவல்துறையில் பணிக்குச் சேர வயது வரம்பு 24-இல் இருந்து 22 ஆக தளர்த்தப்படும் என்று ஆளுநர் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அமலாக்காமல் ஏமாற்றி விட்டனர்.
எனவே 29-ஆம் தேதி திருப்பூர் வரும் முதல்வரை மனித வெடிகுண்டு மூலம் தீர்த்து கட்டுவோம். இந்த தகவலை திருப்பூர் நகராட்சி தலைவர், கோவை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கவும். இப்படிக்கு அல்-உம்மா இயக்கம், கோவை" என்று எழுதப்பட்டிருக்கிறது.
இந்த கடிதத்தை திருப்பூர் தாசில்தார் சுலோச்சனா, திருப்பூர் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கொடுத்து புகார் அளித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. கே.ராஜேந்திரன் தலைமையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. திருப்பூர் முழுவதும் 1,750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் புதிய பேருந்து நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன.