குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் குமாரவேலு இன்று விடுத்துள்ள அறிக்கையில், "குஜராத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசில் சாதி, மதம், மொழி, இன வேறுபாடின்றி எல்லா தரப்பினரும் முன்னேற்றம் அடைந்துள்ளதையே இது காட்டுகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்ற சிலர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கிறோம் என்று கூறிக் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரும் தன்னலமற்ற தலைவருமாகத் திகழும் நரேந்திர மோடி சென்னை வந்தால் திரும்ப மாட்டார் என கொலை செய்யும் நோக்கத்துடன் அறிக்கை விடுகின்றனர்.
அவர்கள் இதுபோன்ற மிரட்டல் விடுவதையும் சுயநலத்திற்காக அரசியல் நடத்துவதையும் நிறுத்திக் கொண்டு உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்திட முயற்சி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.