தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் யானைக்கால் நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அதற்கான தடுப்பு மாத்திரைகள் இன்று முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
கொசுக்கள் மூலம் பரவும் யானைக்கால் நோய் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்பட 14 மாவட்டங்களில் பரவி வருகிறது. இந்த நோயை டி.இ.சி. மாத்திரைகள் சாப்பிட்டால் ஒழிக்க முடியும்.
இம்மாத்திரைகளை தமிழக அரசு இன்று முதல் இலவசமாக வழங்குகிறது. பொது சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டசத்து பணியாளர்கள் ஆகியோர் ஜனவரி 2- ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று டி.இ.சி. மாத்திரைகளை வழங்க உள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் இந்த மாத்திரையை சாப்பிடக்கூடாது. 2 வயது முதல் 5 வயது நிரம்பியவர்கள் 1 மாத்திரையும், 6 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 2 மாத்திரையும், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 மாத்திரையும் சாப்பிட வேண்டும்.
இந்த ஆண்டு கிராமங்களில் 14,59,091 பேருக்கும் நகரங்களில் 7,58,608 பேருக்கும் என மொத்தம் 2,17, 699 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.