மருத்துவ தாவரங்களை பயிரிட நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உலக அளவில் மருத்துவ தாவரங்களின் சந்தை வணிகம் பெருகி வருகிறது. நெல்லி, அசோகு, கீழாநெல்லி, சிறுகுறிஞ்சான், நிலவேம்பு, மணத்தக்காளி, துளசி உள்ளிட்ட 32 வகை மருத்துவ தாவரங்களை வணிக நோக்கில் பயிரிட, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (ஆயுஷ்) நிதி உதவி வழங்குகிறது.
குறைந்தபட்சம் 5 ஏக்கரில், குழுக்களாக சேர்ந்து மருத்துவ தாவரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
மூலிகை வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள் இல்லாத இடங்களில், அவற்றை உருவாக்கவும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, மேலும் விவரம் வேண்டுவோர் உறுப்பினர் செயலர், மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம், இந்திய மருத்துவத் துறை இயக்குனரகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.