சென்னையில் ஓடும் முக்கியமான கால்வாய்களில் கொசு உற்பத்தியைக் ஒழிப்பதற்காக படகுகளில் சென்று கொசு மருந்து அடிக்கும் புதிய திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தை திருவான்மியூர் பக்கிங்காம் கால்வாயில் மேயர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். சிறிது தூரம் படகில் சென்று அவர் மருந்தை தெளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பக்கிங்காம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், லிங்கால்வாய், ஏசிங்காரம் கால்வாய், ஓட்டேரி கால்வாய், கே.கே. நகர் கால்வாய் ஆகியவற்றில் மருந்து தெளிக்க ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 6 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த படகுகளின் மூலம் தினமும் மருந்து தெளிக்கப்படும்.
சென்னை நகர எல்லை பகுதியான மதுரவாயலில் இருந்து கால்வாய் கடலில் கலக்கும் பகுதி வரை சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்திற்கு தினமும் மருந்து தெளிக்கப்படும். அண்ணாநகர், அடையாறு, கொடுங்கையூர், புளியந்தோப்பு, கே.கே.நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஆளும் கட்சி தலைவர் ராமலிங்கம், மண்டல தலைவர் ஜெயராமன், மாமன்ற உறுப்பினர்கள் மீனாட்சி வெங்கட்ராமன், சாந்தி, ஜமுனா கேசவன், பாபு, தரமணி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் ஓடும் கூவம், அடையாறு பக்கிங்காம் கால்வாய் மற்றும் சிறுசிறு கால்வாய்களில் கழிவு நீர் கலப்பதினால் கொசுக்கள் உற்பத்தி பெருகுகிறது. இந்த ஆறுகள் மற்றும் கால்வாய் கரைகளில் 600-க்கும் மேற்பட்ட குப்பங்கள் உள்ளன.
இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். எனவே ஆறுகளில் உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்காக படகுகளில் சென்று தினமும் கொசு மருந்து தெளிக்கும் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி உருவாக்கி உள்ளது.