தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 33 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் தாக்கீது அனுப்பியுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்ட தமிழக உயர்கல்விஅமைச்சர் க.பொன்முடி இத்தகவலைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்தன.
அதனடிப்படையில் கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 33 கல்லூரிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இக்கல்லூரிகளின் மீது இகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், குறிப்பிட்ட 33 கல்லூரிகளுக்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் விளக்கம் கேட்டுத் தாக்கீது அனுப்பியுள்ளது. இந்தக் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால், அதில் பயிலும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 975 விரிவுரையாளர்களுக்கும் இன்று முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊதியத்துடன் கூடிய இந்த ஒரு மாதப் பயிற்சிவகுப்பில், விரிவுரையாளர்களுக்கு பயிற்று முறைகள், தகவல் தொடர்பு பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும்.
தமிழக அரசு அடுத்த கட்டமாக 1,062 விரிவுரையாளர்களுக்கு பணி ஆணைகளை வழங்கவுள்ளது. அவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் என்றார் பொன்முடி.