மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆழிப்பேரலையில் சிக்கி பலியானவர்களுக்கு நாடு முழுவதும் இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் விளைவாக வங்கக் கடலில் உருவான ஆழிப்பேரலை இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா நாடுகளைப் புரட்டி போட்டது. தமிழகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 26-ஆம் தேதி காலை பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது.
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகை, தஞ்சை, கடலுர் மாவட்டங்களில் உள்ள கடலோரக் கிராமங்களில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் அன்றைய தினம் காப்பாற்றுங்கள் என்று ஓலமிட கூட அவகாசம் கிடைக்காமல் ஜலசமாதியானார்கள். அதுவரை லெமூரியா கண்டத்தை கடல் கொண்டு சென்றதையும், பல்வேறு நாடுகள் கடலுக்குள் முழ்கியதையும் செவி வழியாக கேட்டு வந்த மக்களுக்கு தனது கோர முகத்தைக் காட்டினாள் கடல் தாய்.
உலகின் இரண்டாவது நீள கடற்கரையான மெரீனா கடற்கரை முழுவதும் நீரால் சூழப்பட்டது. சென்னை தொடங்கி குமரி வரையிலான மீனவ கிராமங்கள் எல்லாம் துடைத்தெறியப்பட்டு அன்றையத் தினம் எங்கெங்கிலும் மரண ஓலமே எதிரொலித்தது. கிறிஸ்மஸை அன்னையின் ஆலயத்தில் கொண்டாட நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடற்கரையில் கூடியிருந்த மக்களையும் ஆழிப்பேரலை விட்டுவைக்கவில்லை.
கடல் தாயின் சில நிமிட சதிராட்டத்தில் ஏராளமான கடலோரக் கிராமங்களில் வாழ்ந்து வந்த குடும்பங்கள் சின்னாபின்னமாகி சிதறிப் போயின. பெற்றோரை இழந்த பிள்ளைகள்,பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், கணவனை இழந்த பெண்கள், மனைவி பிள்ளைகளை இழந்த கணவன்மார்கள் என்று ஆழிப்பேரலையின் ரூத்ரதாண்டவத்துக்கு சிக்கி கடலோர கிராமங்கள் பேரழிவைச் சந்தித்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 43 மீனவ கிராமங்களில் குறிப்பாக குளச்சல், கொட்டில்பாடு ஆகிய கிராமங்களில் அடுத்த இரண்டு நாட்களும் அவசர கால ஊர்தியின் அலறல் மட்டும்தான். குளச்சல் மருத்துவமனையின் வெளிப்புறத்தில் ஆழிப்பேரலையில் சிக்கி மூச்சடைத்து இறந்து போன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலானவர்களின் உடல்களைப் பார்த்து கதறி அழாதவர்கள் யாரும் இல்லை.
இயற்கையின் சீற்றத்தை மனிதனால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாததுக்கு காரணம் அவன் உயிருக்கு உயிராக நேசித்த பலரை இழந்து போனதால். கடலுக்குச் செல்ல அஞ்சாத மீனவ சமூதாயத்தையே நடுநடுங்க செய்தது இந்த ஆழிப்பேரலை. இதில் தமிழகத்தில் மட்டும் 8,000 பேர் உயிரிழந்தனர்.
சுனாமி என்ற ஆழிப்பேரலை தமிழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் மனதில் ஆற்றொண்ணாத் துயரத்தை உருவாக்கிச் சென்ற 3 -ஆம் ஆண்டு நினைவுத் தினம் இன்று 2004 -ம் ஆண்டு ஆழிப்பேரலையில் தங்களின் இன்னுயிரை இழந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் அமைதி நடைப் பயணம், மெழுகுவர்த்தி ஏற்றுதல், சிறப்புப் பிரார்த்தனைகள் நடைப்பெற்று வருகின்றன.
மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் 3-வது நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர்.