தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்த ரூ.116 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டு மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெரம்பூர் சுரங்கப்பாதை அருகில் அமைக்கப்பட்டுள்ள வாகனச் சுரங்கப்பாதை, பெரம்பூர் நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை மாநகராட்சி மூலம் ரூ.418 கோடி மதிப்பீட்டில் 133 கி.மீ. நீளத்திற்கு ஒப்பந்தங்கள் முடிவாகி, ரூ.6 கோடி மதிப்பீட்டில் 27கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளன. ரூ.74.2 கோடி மதிப்பீட்டில் 380 கி.மீ. நீளத்திற்கு தார் சாலைப் பணிகளின் ஒப்பந்தங்கள் முடிவாகி, ரூ.46.5 கோடி மதிப்பீட்டில் 269 கி.மீ. நிளத்திற்கு பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஆக மொத்தம் ரூ.116 கோடி மதிப்பீட்டில் 513 கி.மீ. நீளத்திற்கு பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தங்கள் முடிவாகி, ரூ.52 கோடி மதிப்பீட்டில் 295 கி.மீ. நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றார்.
மேலும், "வடக்கு உஸ்மான் சாலை - டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பு மேம்பாலப் பணி மார்ச் மாதமும், உஸ்மான் சாலை சந்திப்பு - துரைச்சாமி சாலை சந்திப்பு மேம்பாலப் பணி ஜூன் மாதமும், கோபதி நாராயண சாலை- திருமலை சாலை சந்திப்பு மேம்பாலப் பணி செப்டம்பர் மாதமும் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பூர் மேம்பாலப் பணிகள் இரண்டு மாதத்திற்குள் துவக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மேயர் மா. சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி, துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர் எல்.பலராமன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., மண்டலக்குழுத் தலைவர் ஜெ.சீனிவாசன், மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.