தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 20 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அவரின் சிலைகளுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் இராம வீரப்பன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, பா.ஜ.க. தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஏராளமான தொண்டர்கள் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சேகர் எம்.எல்.ஏ, அவைத் தலைவர் பாண்டுரங்கன், இணை செயலாளர் ரவீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி உட்படப் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.