பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 34 ஆவது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அவரின் சிலைகளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, கே.என்.நேரு, மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கடலூரில் உள்ள பெரியாரின் சிலைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத்தின் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.