வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் குமரி கடலில் நிலை கொண்டுள்ளது. இது படிப்படியாக அரபிக் கடலுக்கு நகர்ந்து சென்று விடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை (புயல்சின்னம்) தற்போது குமரிகடலில் நிலை கொண்டுள்ளது. இது படிப்படியாக அரபிக்கடலுக்கு நகர்ந்து சென்றுவிடும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து விட்டதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்துவிடும். இன்றும் தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் லேசான மழைபெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதுவும் உருவாகவில்லை. டிசம்பர் 27ஆம் தேதிக்குப் பிறகு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து விடும். கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் தமிழகத்தில் இயல்பை காட்டிலும் 5 விழுக்காடு அதிகமாக மழை பெய்துள்ளது என்று ரமணன் தெரிவித்தார்.
இன்று பதிவான மழை அளவு: திருக்கோவிலூர், சாத்தனூர் அணை 21 செ.மீ., விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, கொடைக்கானல் 20 செ.மீ., திருவிடைமருதூர் 19 செ.மீ., பொன்னேரி, செய்யூர் 18 செ.மீ., செங்கம், கன்னூர் 17 செ.மீ., உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை 16 செ.மீ., தாமரைபாக்கம் 15 செ.மீ., காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவள்ளூர் 9 செ.மீ., சென்னை 7 செ.மீ. மழை பெய்துள்ளது.