கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 17 பேர் தாக்கல் செய்த விடுதலை பிணையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அல்-உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்சா, அன்சாரி உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 13 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முகமது இக்பால், அப்துல் ரகுமான் அஷ்ரப் உள்ளிட்ட 17 பேர் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரியும், தங்களை பிணையில் விடுவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் இவர்கள் அனைவரும் பலரது உயிரை பலிவாங்கிய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்பதாலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட விருப்பதாலும், விடுதலை பிணை அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 17 பேரின் விடுதலை பிணை மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.