தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கும் ஜனவரி 10ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 2000ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தண்டனை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் நடந்த மறியல் வன்முறையானது. அப்போது வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பேருந்துக்கு அ.இ.அ.தி.மு.க.வினர் தீ வைத்தனர். இதில் மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக 31 பேரை காவல்துறையினர் கைது அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்தபோதே ஒருவர் இறந்து விட்டார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 28 பேர் மீதான வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் நெடு (எ) நெடுஞ்செழியன், மாது (எ)ரவிச்சந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய 25 பேருக்கு 7 ஆண்டுகள் 3 மாதம் வரை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 3 பேருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மற்ற 25 பேரும் தண்டனையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து 28 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் ஒரு வாரண்டை கோவை சிறைக்கு அனுப்பி உள்ளார். அதில், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் ஜனவரி 10ஆம் தேதி காலை 6 மணிக்குள் கோவை சிறையில் தூக்கிலிடுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. வட்டாரம் உறுதி செய்துள்ளது.