கன மழையால் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 3ஆம் தேதி நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஜெகந்நாதன் அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடந்தது வந்தது. கன மழையால் ஒன்றிரண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தேவைப்பட்டால் மழை பாதித்த அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக் கொள்ளலாம் என தமிழக பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது.
அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறை விடப்படும். திடீர் மழையால் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. அதனால் விடுப்பட்ட தேர்வுகளை அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஜெகந்நாதன் கூறுகையில், அரையாண்டு தேர்வின் போது தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் அத்தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. எனவே பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறை தொடர்ந்து பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதி திறக்கிறது. பள்ளி திறந்த மறுநாள் (3-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் என்று கூறினார்.