முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை பற்றி தமிழக, கேரள முதலமைச்சர்கள் நேற்று டெல்லியில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை பற்றி கேரள, தமிழக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டதை தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மத்திய நீர்ப்பாசனத் துறை மந்திரி சைபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கும் இடையே நேற்று இரவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, பொதுப்பணித்துறை செயலாளர் ஆதிஷேசய்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கேரளா சார்பில், அம்மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், சட்ட அமைச்சர் விஜயகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இரு மாநில அரசுகளின் சார்பில், அவரவர் நிலைகளை கூறினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை முடிந்ததும் முதலில் கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் வெளியில் வந்தார். அவர் கூறுகையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தங்கள் நிலையை வலியுறுத்தியதால் எந்த முடிவும் ஏற்படவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
அதையடுத்து தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரள அரசின் சார்பில் அவர்களுடைய கருத்தை வலியுறுத்தினர். தமிழகத்தின் நிலைகளை நாங்கள் தெளிவுப்படுத்தினோம். சட்ட ரீதியான பிரச்சினைகளையும் எடுத்துக் கூறினோம். அவர்கள் தரப்பில் பேசும்போது, அணையில் நீர்க்கசிவு அதிகமாக உள்ளது. அதன் காரணமாக அணைக்கு பெரிய ஆபத்து ஏற்படும். எனவே மக்கள் பயப்படுகின்றனர் என்று சொன்னார்கள். மேலும் எந்த அளவுக்கு நீர்க்கசிவு உள்ளது என்பது பற்றி எங்களுக்கு சரியாக கணக்கு காட்டுவதில்லை. எங்களை அளக்கவும் அனுமதிப்பதில்லை என்றெல்லாம் கூறினர்.
அதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி பதிலளிக்கையில்; ஒரு அணையில் நீர்க்கசிவு இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். எங்கள் தரப்பில் அணையில் நீர்க்கசிவு அதிகமாக இல்லை என்று கூறுகின்றனர். உங்கள் தரப்பில் நீர்க்கசிவு அதிகமாக இருப்பதாகவும், அது அணைக்கு ஆபத்து என்றும் சொல்கிறீர்கள். எனவே இரு தரப்பினருக்கும் பொதுவாக மத்திய அரசே இரு மாநிலத்தையும் சேராத பொறியியல் வல்லுநர்களை கொண்டு, மத்திய நீர்வள ஆணையத்தின் மூலமாக அணையில் எந்த அளவுக்கு நீர்க்கசிவு இருக்கிறது என்பதை கணக்கெடுத்து கூறட்டும். அதற்கு தமிழ்நாட்டிற்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தார். அதற்கு, இது குறித்து பரிசீலிப்பதாகவும், அதிகாரிகளை கலந்து கொண்டு முடிவினை தெரிவிப்பதாகவும் கேரள முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
புதிய அணை கட்டுவதைப் பற்றி பேசினார்களா? என்று கேட்டதற்கு, புதிய அணை கட்டுவதைப் பற்றி சொன்னார்கள். அதற்கான பதிலை தமிழகத்தின் சார்பில் நாங்கள் கூறி இருக்கிறோம் என்று துரைமுருகன் கூறினார்.
மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில், மீண்டும் பேச்சுவார்த்தை, இரண்டு முதலமைச்சர்களுக்கும் நேரம் கிடைக்கும் போது பேசலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.