விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் வைகோவை விமர்சிக்காமல் மற்றவர்களைப் பற்றி மட்டும் ஜெயலலிதா குற்றம் சாட்டுவது ஏன் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாள் தவறினாலும் அறிக்கை மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜெயலலிதா, இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசிலே உள்ளவர்கள் இன்னமும் தன்னுடைய ஆலோசனையைக் கேட்டுக் கொண்டுதான் நடக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, மத்திய அரசு கூட்டியுள்ள ஒரு கூட்டத்திற்கு தமிழக அரசின் முதலமைச்சர் என்ற முறையில் கருணாநிதியை அழைத்திடக் கூடாது என்ற வகையில் கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு கருணாநிதி இரங்கல் தெரிவிக்கலாமா என்பதைப் பற்றி ஜெயலலிதா மீண்டும் மீண்டும் பெரிய குற்றமாகக் கூறுகிறார். ஒருவர் இறந்ததற்காக இரங்கல் தெரிவிப்பது என்பது மனித நேயப் பண்பாடு. அவருக்கு அது இருக்கட்டும், இல்லாமல் போகட்டும். ஆனால் முதலமைச்சர் கருணாநிதியைப் பற்றி வாய் நீளம் காட்டினால் எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் பேசுவதைப் பற்றி அறிக்கை விடும் ஜெயலலிதா, அதே கருத்தை எதிரொலித்து அறிக்கை விடும் வைகோவிற்கு எதிராக வாய் திறக்காமல் இருக்க என்ன காரணம்? இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாதென்று விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக வைகோ பிரதமருக்கு கடிதமே எழுதயிருக்கிறாரே, அதைப்பற்றி ஜெயலலிதா விமர்சிக்காததற்கு என்ன காரணம்?
ஒரேயொரு துணையாக இருக்கும் அவரையும் இழந்து விடக்கூடாது என்பதுதானா? முதலில் ஜெயலலிதா இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு, அதன் பின்னர் தி.மு.க.வைப் பற்றியும், கருணாநிதியைப் பற்றியும் அறிக்கை விட முன் வரட்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.