முதலமைச்சர் கருணாநிதி இன்று மதியம் 1.40 மணி ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் நிதியமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்டோரும் சென்றனர்.
தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர் கருணாநிதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் ஆகியோர் சந்தித்து இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பேசுகின்றனர்.
நாளை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடை பெறவுள்ள தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார். தமிழகத்திற்கு அடுத்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டுமென்ற மாநில திட்டக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசுக்கு கருணாநிதி சமர்ப்பித்து திட்டக் குழுவுடன் பேச்சு நடத்த உள்ளார்.
20ஆம் தேதி நடக்கும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் கருணாநிதி, அன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சுகிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் தலைமையில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் கருணாநிதி, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் கருணாநிதி டிசம்பர் 21ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.