சாலை மறியல் செய்வது முழுமையான மனித உரிமை மீறல் ஆகும் என புதுச்சேரி மனித உரிமை ஆணைய தலைவர் சம்பத்குமார் தெரிவித்தார்.
தேசிய மனித உரிமை ஆணைய அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருது வழங்கும் விழா சேலத்தில் நடந்தது. கோவை மண்டல வேலைவாய்ப்புத்துறை அலுவலர் லதா தலைமை வகித்தார். புதுச்சேரி மனித உரிமைகள் ஆணைய தலைவர் சம்பத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த உலகில் எட்டு லட்சம் உயிரினங்கள் உள்ளன. இதில் மனிதனை தவிர மற்ற அனைத்து உயிர்களும் தங்கள் கடமையை சரிவர செய்கின்றன. மனிதனை திருத்தவே கடவுள் அவதாரமெடுத்தார்.
அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என உள்ளது. ஆனால் 57 ஆண்டுகளாகியும் பிரச்னை தீரவில்லை. 99 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது கோட்பாடாக உள்ளது. 99 குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கொள்கை மாற்றம் வரவேண்டும்.
சாலை மறியல் என்பது முழுமையான மனித உரிமை மீறல். ஒரு பிரிவினர் தங்களுக்கு உரிமை கிடைக்க மற்றவர்களின் உரிமையை பறிக்கும் வகையில் சாலை மறியல் செய்கின்றனர். சாலை மறியல் செய்தால் காலையில் கைது மதியம் உணவு, மாலையில் விடுதலை என்றிருப்பதால் எல்லோரும் மறியலில் ஈடுபடுகின்றனர்.
அந்த குற்றத்துக்கு 15 நாள் சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சியினர் சாலை மறியல் நடத்த மாட்டார். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கின் தீர்ப்பு வரவேற்கக்கூடியது. நீதிபதிகள் தங்கள் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தினால், நாட்டில் குற்றங்கள் குறையும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அவர் பேசினார்.