சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் வழக்கு விசாரணை நடத்தும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரும் புத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நீதிமன்றங்கள் இயங்கி வந்தன. வேலை நாட்களை ஈடு செய்ய சில சனிக்கிழமைகளிலும் நீதிமன்றங்கள் இயக்கப்பட்டு வந்தன. வரும் புத்தாண்டு முதல் சனிக்கிழமைகளில் நீதிமன்றங்கள் இயங்குவது குறைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 5ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 6ஆம் தேதியும் உள்ள சனிக்கிழமைகளில் மட்டும் நீதிமன்றங்கள் இயங்கும். மற்ற சனிக்கிழமைகளில் வழக்கப்படி விடுமுறையாகும். சில சனிக்கிழமைகளில் உயர் நீதிமன்றங்கள் இயங்கி வந்ததை 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் புத்தாண்டு முதல் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் விசாரணை நடைபெறும். அதாவது, வழக்கு விசாரணை நடைபெறும் நேரம் 15 நிமிடம் நீடிக்கப்பட்டுள்ளது.
வரும் 2008ஆம் ஆண்டில் மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி முடிய கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்தகால கட்டத்தில் விடுமுறை கால நீதிமன்றம் மட்டும் இயங்கும். இதேபோல, அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய தசரா விடுமுறை விடப்படுகிறது. இந்தகால கட்டத்தில், விடுமுறை கால நீதிமன்றம் மட்டும் இயங்கும். டிசம்பர் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்படுகிறது.