''சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்கள் ரூ.17 ஆயிரம் கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது'' என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
குமரி மாவட்டம், குழித்துறையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், சேது சமுத்திர திட்டம் கடந்த 3 ஆண்டு காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. இது முடிவடைய இன்னும் ஒரு ஆண்டு ஆகும்.
இந்தியாவில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் கோடி செலவில் சாலைப்பணிகள் செய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. 4 வழி சாலைகள், புறவழி சாலைகள், விரிவாக்க சாலைகள் இதில் அடங்கும். இந்த பணிகளை 2015ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தங்க நாற்கர சாலை திட்டம் 3-வது கட்டமாக ஏறத்தாழ 12 ஆயிரத்து 109 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழி சாலைகள் இந்தியா முழுவதும் அமைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களையும் ரூ.17 ஆயிரம் கோடி செலவில் விரிவுபடுத்த புதிய திட்டங்கள் உள்ளன. இந்தியாவில் ரப்பர் சாலைகள் போடும் திட்டங்கள் இல்லை. தற்போது போடப்படும் 4 வழி சாலைகளில் எந்த சாலையும் மழையால் பாதிக்கப்படவில்லை. திருவனந்தபுரம்-கன்னியாகுமரி 4 வழி சாலைக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் விடப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.