''மலேசிய தமிழர்கள் விவகாரம் அந்நாட்டு உள் விவகாரம் என்பதால், இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது'' என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணன் கூறுகையில், டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் குறித்தும், முதல்வர்கள் மாநாடு குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன். பிரதமரின் உத்தரவின் பேரில் முதல்வரை சந்தித்தேன். தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய சில முக்கியப் பிரச்சினைகள் குறித்து கருணாநிதியிடம் விவாதிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இங்கு வந்தேன்.
தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழகத்தில் ஊடுருவி விடாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை படையினர் அவர்களது கடல் பகுதியிலும், நமது படையினர் நமது எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இரு நாட்டுப் படைகளும் கூட்டு ரோந்தில் ஈடுபடும் வாய்ப்புகள் இல்லை.
நக்சலைட்டுகள் நடமாட்டம் தொடர்பாக, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளது. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகத் திறமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மலேசிய தமிழர்கள் விவகாரம் அந்நாட்டு உள் விவகாரம் என்பதால், இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று நாராயணன் தெரிவித்தார்.