அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இணையதள வசதியுடன் இலவச லேப் டாப் கணினி வழங்கப்படும் என்று துணைவேந்தர் டி.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில், உலகம் முழுவதும் இன்று கணினி மயமாகிவிட்டது. உலகத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பி.இ. மெக்கானிக்கல் படித்தாலோ, பி.இ. சிவில் படித்தால் கூட அங்கும் டிசைன் போட கணினி தேவைப்படுகிறது. சாப்ட் ஸ்கில் என்ற ஆங்கில பேச்சாற்றலுடன் கூடிய கணினி அறிவு இருந்தால் தான் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. அந்த திறமை இல்லாமல் பாடத்தில் 83 விழுக்காடு மதிப்பெண் இருந்தும் பலருக்கு வேலை கிடைப்பதில்லை. அதனால் அனைத்து தரப்பு பி.இ. மாணவர்களும் தாங்கள் படித்த படிப்புடன் தனியாக கணினி கல்வியை கற்று வருகிறார்கள்.
வசதி படைத்த மாணவர்கள் லேப்டாப் கணினியை வாங்குகிறார்கள். ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் கட்டுவதேற்கே சிரமப்படுகிறார்கள். அதனால் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 பொறியியல் கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும், மாணவர்கள் பணத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் கேட்டு குறைந்த விலையில் லேப்டாப் வாங்கிக் கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் லேப்டாப் கணினி வாங்க முடியாத ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வாங்கி கொடுக்க உள்ளோம்.
இது தவிர அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மின்னஞ்சல் வசதியை எல்லா மாணவர்களும் பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு லேப்டாப் கணினியுடன் இணையதளம் கொடுக்கப்படும் என்று விஸ்வநாதன் கூறினார்.