''தமிழ் இனத்துக்கு எதிராக இலங்கை செல்லும் இந்திய ராணுவ குழுவை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்'' என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் நேர்மையில்லாத பேச்சு வார்த்தையில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த சிங்கள அரசின் வான்படையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு வலிய வலிய வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. சிங்கள இன வெறிக் கும்பலுக்கு பாகிஸ்தான் பல வகையிலும் உதவிகள் செய்வது போல, இந்திய அரசும் போட்டி போட்டிக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஓரணியில் நின்று சிங்கள அரசுக்கு முட்டுக் கொடுப்பது மிகப் பெரும் கேலிக் கூத்தாக உள்ளது.
தமிழ்நாட்டு மீனவத் தமிழர்களை அவ்வப் போது சுட்டுக் கொன்று இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் சிங்கள அரசு ஈடுபட்டு வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதிலேயே இந்திய அரசு முனைப்பாய் இருக்கிறது. இந்திய எல்லைக்குள் வாழும் சுமார் 6 கோடி தமிழர்களின் உணர்வுகளை துளியும் பொருட்படுத்தாமல் இழிவுபடுத்தும் வகையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்குவதில் சிங்கள இனவெறியர்களை விட தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தான் இன்று (17-12-07) இந்திய தரை மற்றும் வான்வழி படையின் வல்லுநர் குழு ஒன்று கொழும்பு செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் எதிரான இந்திய அரசின் இத்தகைய போக்கு வேதனைக்குரியதும் கண்டிக்கத்தாகும்.
இது தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தியையும் நேரிலே சந்தித்து தமிழினத்திற்கு எதிரான செயல் திட்டத்தோடு புறப்பட்டிருக்கும் இந்திய ராணுவ வல்லுநர் குழுவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்த வேண்டும். மேலும், சிங்கள இனவெறியர்களின் வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சிங்கள அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் இந்திய அரசை வற்புறுத்துகிறோம். சிங்கள இன வெறியர்கள் வான்வழித் தாக்குதலை நிறுத்தினால், புலிகளும் வான்வழித் தாக்குதலை நிறுத்தும் சூழல் உருவாகும்.
ஆகவே சிங்கள அரசின் வான்படையை மேம்படுத்த வேண்டுமென்கிற முயற்சியை கைவிட்டு, வான் வழித் தாக்குதலை கைவிட வலி யுறுத்துவதுடன் சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிங்கள வான்படைத்தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாகவும் நூலிழையில் உயிர் தப்பியிருப்பதாகவும் சிங்கள அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் ஆதாரம் இல்லாத செய்திகளை பரப்பி தமிழர்களிடையே பெரும் பதற்றத்தையும், குழப்பத்தையும் உருவாக்க முயற்சித்து வருகின்றன. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தி விட முடியும் என்பது சிங்கள வெறியர்கள் கனவு கண்டு வருகின்றனர்.
சிங்கள அரசின் இத்தகையை கனவை நனவாக்குவதற்கு இந்திய அரசு துணை நிற்க போகிறதா? அல்லது இந்திய நாட்டைச் சார்ந்த 6 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க போகிறதா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எனினும் எமது ஜனநாயக உணர்வுகளை இந்திய அரசு மதிக்கும் என்கிற நம்பிக்கையோடு கொழும்பு சென்றுள்ள இந்திய ராணுவ வல்லுநர் குழுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.