கும்பகோணத்தில் இன்று காலை வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று தி.மு.க.வினர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருநெல்வேயில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாடு முடிந்ததும் நேற்று இரவு தொண்டர்கள் அவரவர் சொந்த ஊருக்கு பேருந்து, வேன், கார்களில் திரும்பி கொண்டு இருந்தனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த தி.மு.க.வினர் வேன் இன்று அதிகாலை 3.15 மணிக்கு கும்பகோணம் அரசூர் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது புதுச்சேரியிலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்ற டாடா சுமோ மீது தி.மு.க.வினர் வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் மயிலாடுதுறை கடலங்குடி தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன் (45), சுதாகர் (25), வேன் ஓட்டுனர் முத்துப்பாண்டி (55), புதுச்சேரி அய்யப்ப பக்தர் பார்த்தசாரதி (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களில் தி.மு.க. தொண்டர் பாலு (53) என்பவர் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சை, கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து கும்பகோணம் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.