சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். மொத்தம் 1455 சதுர கி.மீ. பரப்பளவுடையது. சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, டி.என்.பாளையம், ஆசனூர் என ஐந்து வன சரகங்களை கொண்ட இந்த வனப்பகுதியில் முட்புதர்காடுகளில் தொடங்கி உயர்ந்த சிகரங்களின் உச்சியில் உள்ள புல்வெளி, சோலைக்காடுகள் வரை காணப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட மங்களப்பட்டி என்ற இடத்தில் இணைகிறது இந்த வனத்தின் சிறப்பாகும். இந்த வனப்பகுதியில் வெளிமான்,வரிக்கழுதைப் புலிகள், வெண்முதுகு வல்லாறு போன்ற அறியவகை உயிரினங்களும் காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது சிறப்பான ஒன்றாகும். இதுதவிர தற்போது சத்தியமங்கலம் வனக்கோட்டப்பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எந்த பகுதிக்கு சென்றாலும் யானை கூட்டங்களை சாதாரணமாக காணமுடிகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றம் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடம்பெயரும் யானைகளின் முக்கிய வழித்தடமாக சத்தியமங்கலம் வனப்பகுதி விளங்குகிறது.
பொதுவாக யானைகளை பொறுத்தவரை கடந்த ஆண்டில் இதே நேரத்தில் எந்த வனப்பகுதியில் இருந்தனவோ அதே வனப்பகுதிக்கு தற்போதும் வந்துவிடும் இயல்புடையது. அதேபோல் தண்ணீருக்காக நாள்தோறும் செல்லும் வழியில் மாற்றமே இருக்காது.
ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் நாள்தோறும் நீர்நிலைகள் பகுதியில் யானைகள் வந்துசெல்வதை காணமுடியும்.
தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் விளைநிலங்களுக்கு தற்போது யானை கூட்டங்கள் படையெடுக்க தொடங்கியுள்ளது. சத்தியமங்கலம், அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகள் விவசாய பயிர்களான சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது.
இரவு முழுவதும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் ஓரளவு யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்கப்படுகிறது. வனப்பகுதியை சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருக்கும் பட்சத்தில் மின்வேலியை வறண்ட மரக்கிளையை ஒடித்து அதன்மேல் கால்வைத்து யானைகள் தாண்டிவிடுவது அதன் அறிவுதிறனை வெளிக்காட்டுகிறது.