தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு உரிய வழிவகையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. இளைஞர் அணி முதல் மாநில மாநாடு நெல்லையில் நேற்று முன்தினம் பிரமாண்ட பேரணியுடன் துவங்கியது. நேற்று மாலையில் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மற்ற மாநில ஆட்சி மொழிகளை புறக்கணித்துவிட்டு இந்தி மொழியை மட்டுமே உயர்நீதிமன்ற மொழியாக ஏற்பது இந்தியாவில் உள்ள பிற மொழி பேசும் மக்களுக்கு தீங்கு இழைப்பதாகும். கல்வி அறிவற்ற கோடிக்கணக்கான பாமரமக்களும் நீதிகோரி உயர்நீதிமன்றங்களை அணுகும் நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளும் தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும், அந்தந்த மாநில நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தவேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை அரசியல் உள்நோக்குடன் தடுத்து நிறுத்திட சில மதவாத சக்திகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் தடை செய்ய முயலும் பா.ஜ.க., இந்துமுன்னணி, சுப்பிரமணியசாமி உள்ளிட்ட தமிழர் விரோத மதவாத சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு இத்திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றிட மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தென் மாவட்டங்களில் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்கவும், நாங்குநேரி உயர் தொழில்நுட்ப வளாக திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
மலேசியத் தமிழர்கள் மற்ற இனத்தாரோடு சக உரிமையோடு சுமூகமாக வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மாநிலங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் தேவைக்கேற்ப இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயித்து கொள்ளும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கிடும் வகையில் மத்திய அரசு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு உரிய வழிவகையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.