நெல்லையில் நடந்துவரும் திமு.க. இளைஞரணியின் 2-வது நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டின் இறுதியில் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் நிறைவுரையை பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் முத்துராமலிங்கம் வரவேற்று பேசினார்.
அதைத் தொடர்ந்து தமிழச்சி தங்கப்பாண்டியன், மாணவரணி மாநில செயலாளர் புகழேந்தி, அசன் முகமது ஜின்னா, மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் பேசினார்கள். இறுதியாக மாநாட்டு தலைவர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பின்னர் கவிஞர் கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி.உள்பட 28 பேர் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.
பிரம்மாண்டப் பேரணி! நெல்லை குலுங்கியது!
திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி திருநெல்வேலியில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் வெள்ளைச் சீருடை அணிந்த இளைஞர்கள் பங்கேற்ற பிரமாண்டமான அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
வ.உ.சி. மைதானத்தில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு தொடங்கிய இந்தப் பேரணியை, லேசான மழைத் தூறலுக்கு இடையே மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். அப்போது கருப்பு-சிவப்பு வண்ண பலூன்களை ராசாவும், இளைஞரணியின் மாநிலச் செயலரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினும் பறக்கவிட்டனர்.
பேரணியில் முதலாவதாக ஒரு யானை சென்றது. அதைத் தொடர்ந்து 56 குதிரைகளில் இளைஞரணித் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
பின்னர் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பயிற்சிபெற்ற, சீருடை அணிந்த இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணியினர் போர் வீரர்கள் போன்று தலைக்கவசம் அணிந்து கையில் திமுக கொடியுடன் வீறு நடைபோட்டு புறப்பட்டனர். அவர்களுக்குப் பின்னால் திறந்த ஜீப்பில் வெள்ளைச் சீருடை அணிந்து ஸ்டாலின் சென்றார். அவருடன் மத்திய அமைச்சர் ராசாவும் சென்றார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட இளைஞரணியினரும் அணிவகுத்துச் சென்றனர்.
இந்தப் பேரணி, பெரியார் சிலை, மாவட்ட மைய நூலகம், அண்ணாநகர், மகராஜநகர் ரவுண்டானா வழியாக மாநாட்டுத் திடலை அடைந்தது.
இந்தப் பேரணியைப் பார்வையிட பாளையங்கோட்டை மகராஜநகர் ரவுண்டானா அருகே திருவாரூர் தேர் போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், தி.க. தலைவர் வீரமணி ஆகியோர் பார்வையிட்டனர்.
முதல்வர் அமர்ந்திருந்த மேடைக்கு வலதுபுறத்தில் முதல்வர் மற்றும் ஸ்டாலினின் குடும்பத்தாரும், இடதுபுறம் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மத்திய, மாநில அமைச்சர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும், கட்சியின் நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிட்டனர்.
ஒரு மேடையில் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களும், மற்றொரு மேடையில் பெண் அமைச்சர்கள் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் அமர்ந்து பார்வையிட்டனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பேரணியில் வெள்ளமென திரண்டதால் நெல்லை நகரம் குலுங்கியது.