ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் தமிழகத்தை சேர்ந்த 150 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க 20 பேர் கொண்ட குழுவினர் இன்று ஆந்திரா விரைந்துள்ளனர்.
சென்னை காசிமேடு, ராயபுரம் பகுதியை சேர்ந்த 150 மீனவர்கள் நேற்று முன்தினம் 25 படகுகளில் ஆந்திர கடல் எல்லையை ஓட்டிய பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். பத்து நாட்கள் அவர்கள் தங்கி மீன் பிடிப்பார்கள். இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவானதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் உயிர் பிழைப்பதற்காக தமிழகமீனவர்கள் ஆந்திர எல்லைக்குள் நுழைந்து காக்கிநாடா துறைமுகத்துக்கு சென்றனர். அப்போது அவர்களுடன் ஆந்திர மீனவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த ஆந்திர கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் அனைவரையும் பிடித்து சிறை வைத்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் தமிழக மீனவர்கள் 150 பேர் சிறைபிடிக்கப் பட்டுள்ளதாக சென்னை காசிமேடுக்கு செல்பேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, மீன் வளத்துறை உதவி இயக்குனர் நசீருல்லா, மீனவர்கள் பஞ்சாயத்து சங்க தலைவர் சத்யன் தலைமையில் 20 பேர் கொண்ட மீட்பு குழுவினர் காக்கிநாடா விரைந்துள்ளனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டு நாளை சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.