''நாடாளுமன்ற தேர்தல் தற்போது வராத நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கூறுவதற்கு இயலாது. ஆனால் கட்டாயம் கூட்டணி அமைக்கப்படும்'' என்று மாநில பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்து வருகிறது. இன்று செய்தியாளர்களிடம் மாநில தலைவர் இல.கணேசன் கூறுகையில், தி.மு.க.வினர் தற்போது அரசின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகளை சுமத்தப்படும்போது, முந்தைய அரசை சுட்டிக்காட்டி அப்போது நடக்கவில்லையா என்று கூறி தப்பிக்கும் முறையை கையாண்டு வருவதை போல் தற்போது பா.ம.க. தலைவர் ராமதாசும் தப்பிக்க பார்க்கிறார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, விளை நிலங்களில் கல்லூரி அமைத்திருப்பதாக குற்றம்சாற்றியது தவறு. விளை நிலத்தில் கல்லூரி கட்டப்படவில்லை என்று உறுதியாக கூற ராமதாசும் முன்வரவில்லை. பா.ம.க.வினர் தவறு செய்திருந்தால் கூட அதே தவறினை தி.மு.க.வினரும் செய்ய முன்வரக்கூடாது. குஜராத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பொய்யான தகவலை கூறுகிறார். மின்வெட்டை சரிசெய்ய தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் தற்போது வராத நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கூறுவதற்கு இயலாது. ஆனால் கட்டாயம் கூட்டணி அமைக்கப்படும். கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளை தி.மு.க. அரசு கூறாமல், நல்ல திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். அத்வானியை பிரதமராக்க சபதம் ஏற்று கடுமையாக உழைப்போம் என்று இல.கணேசன் கூறினார்.