தி.மு.க. மாநாட்டிற்கு வந்த வேன் மோதி இரண்டு காவலர்கள் பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர்கள் அய்யாசாமி, காளிசந்திரன். இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் நடக்கும் தி.மு.க. இளைஞர் மாநாட்டுக்கு பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
கயத்தாறு- கங்கைகொண்டான் சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது தி.மு.க. மாநாட்டுக்கு வந்த வேன், இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அய்யாசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காளிசந்திரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காளிசந்திரன் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் பலியான காவலர்கள் இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் கருணாநிதி ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பலியான காவலர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.