தமிழ்நாட்டில் நிலங்களைக் கூறுபோட்டு விற்பவர்களின் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விரைவில் வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தம்மிடம் தமிழ்நாட்டில் நிலங்களைக் கூறுபோட்டு விற்பவர்களின் பட்டியல் உள்ளதாகவும் தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அவரிடம் அப்படி ஒரு பட்டியல் உள்ள நிலையில் அதனை வெளியிட தயக்கம் காட்டக் கூடாது என்றும், உடனடியாக அந்த பட்டியலை ராமதாஸ் வெளியிட வேண்டும் என தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள் கிராமங்களுக்கு எதிரான கட்சிகள் என்று மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். இதே கருத்தை மருத்துவர் ராமதாஸ் ஆதரித்து வருகிறார். இதனை நாங்கள் கடுமையான நிராகரிக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.
கிராமங்களில் அடிப்படை வசதியென்றால் முதலில் சாலை வசதி, குடிநீர், கல்வி நிலையங்கள், மின்வசதி ஆகியவை தான் என்று தெரிவித்த தா.பாண்டியன், மற்றவை எல்லாம் அப்புறம்தான் என்றார். அதே நேரத்தில் மருத்துவ கல்வியின் காலத்தை அதிகரிப்பதையும் எதிர்ப்பதாக கூறினார்.
நெல்லுக்கு 50 ரூபாய் உயர்த்தியதற்கு முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட தா. பாண்டியன், “இது காணாது. கோதுமைக்கு 1000 ரூபாய் உயர்த்தியுள்ளது போல நெல்லுக்கும் உயர்த்த தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” எனஅவர் முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி இடித்துத் தள்ளப்போவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியை தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து வீடுகள் இடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவொற்றியூரில் முடப்பட்டுள்ள எம்.ஆர்.எஃப். தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தா.பாண்டியன் எச்சரித்துள்ளார்.