மலேசியாவில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலேசியாவில் தங்களின் சம உரிமைக்காகப் போராடி வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களின் மீது மலேசிய அரசு தொடர்ந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகிறது.
இப்பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்குள்ள இந்திய வம்சாவழியினரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்தியப் பிரதமரைக் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தேன்.
கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கோலாலம்பூரில் 10 ஆயிரம் பேர் பங்கேற்று நடத்திய பேரணியின் தலைவர் உதயகுமார் மீது கிளர்ச்சி தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
உரிமைக்காகப் போராடி வருகின்ற இந்திய வம்சாவழி இனத் தலைவர்களான கங்காதரன், வசந்தகுமார், உதயகுமார், மனோகரன், கணபதிராவ் போன்றோரை மலேசிய அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற "ஆள்தூக்கிச் சட்ட"த்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.
மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவழியினரில் பெரும்பகுதியினர் தமிழர்கள் ஆவர். மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது பதாவி, போராடும் தமிழர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல் எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றார்.
இந்நிலையில் இந்தியா தன்னுடைய அரசுமுறை உறவுகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.