பா.ம.க.வை அழிக்க முயற்சி நடைபெறுகிறது என்றும், அது ஒருபோதும் நடக்காது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை அடுத்த உத்திரமேரூரில் இன்று நடந்த பா.ம.க. இல்லத்திருமண விழாவில் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், கல்வியை தனியார் கொள்ளையடிக்க தாரை வார்த்திருக்கிறார்கள். ஆனால், அரசாங்கமோ சாராயக்கடைகளை நடத்தி மக்களை குடிக்கச் சொல்கிறது.
ஏழை, எளிய நலிந்த மக்களுக்காக விழுப்புரத்தில் வன்னிய சமுதாயம் கல்விக் கோயில் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதனை விளை நிலத்தில் கட்டி வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்லியிருக்கிறார். நாங்கள் ஒன்று சொன்னால் ஏட்டிக்கு போட்டியாக அவர் ஒன்றை சொல்வது என்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார். அது விளை நிலமா என்பதை வீராசாமி நேரில் வந்து பார்த்துச் சொல்ல வேண்டும். பா.ம.க.வை அழிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. அதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த முயற்சி ஒருக்காலும் நடக்காது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம், தரமற்ற சினிமா, போதைப்பழக்கங்களுக்கு மாணவர்களும், இளைஞர்களும் அடிமையாவது, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியர் பலாத்காரம் என ஒரு அழிவுக்கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்தி தமிழகத்தையும், மக்களையும் வாழ வைப்பதில் அரசும், அமைச்சர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.