சென்னை வடபழனி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் மரணமடைந்ததை கண்டித்து வடபழனி காவல் நிலையத்தை இன்று விடுதலைச் சிறுத்தைகள், வணிகர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கேரளாவை சேர்ந்த சையது அலி (43) என்பவர் வடபழனி நூறடி சாலையில் தேனீர் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து அவரை வடபழனி காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் சையது அலி மர்மமான முறையில் இறந்ததாக புகார் கூறப்பட்டது. இதை காவல்துறையினர் மறுத்தனர். சையது அலிக்கு ஏற்கனவே உடல்நலம் பாதித்திருந்தது என்றும், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து திருப்பி அனுப்பி விட்டதாகவும், அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார் என்றும் இதற்கும், காவல் நிலையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இறந்த சையது அலியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வடபழனி காவல் நிலையம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாறன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திருமாறன், உயிரிழந்த டீக்கடை வியாபாரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டார். இந்த முற்றுகை போராட்டம் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
அவர்கள் சென்ற பிறகு அப்பகுதியை சேர்ந்த வணிகர்கள், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர்.
பின்னர் வெள்ளையன் கூறுகையில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது உண்மை தான். ஆனால் அதை ஒரு தேச விரோத குற்றம் போல கருதி வியாபாரிகளை துன்புறுத்துவது சரியல்ல. இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வெள்ளையன் வலியுறுத்தினார்.
விடுதலைச்சிறுத்தைகளின் முற்றுகை போராட்டம், வணிகர்களின் ஊர்வலம் காரணமாக வடபழனி பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.