காஞ்சிபுரம் அருகே தி.மு.க.-தே.மு.தி.க.வினர் இடையே நடந்த மோதலில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக தே.மு.தி.க.வினர் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இளைஞர்களுக்கு தி.மு.க.வினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதி தே.மு.தி.க.வினரை அந்த பகுதி தி.மு.க.வினர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு நேற்று இரவு அழைப்பு விடுத்தனர். அப்போது வேறு சில தே.மு.தி.க.வினர் தடுத்தனர். அப்போது இரண்டு கட்சியினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இதையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக இன்று காலை தி.மு.க.-தே.மு.தி.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் இரும்பு கம்பியால் ஒருவர்கொருவரை தாக்கிக் கொண்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ் (20), விநாயகம் (19), குமார் (20), செல்வம் (20), தே.மு.தி.க.வை சேர்ந்த சுரேஷ் (20) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த இரண்டு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.
இந்த மோதல் தொடர்பாக தே.மு.தி.க.வினர் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.