தேர்தலின்போது வேட்பாளரின் அனுமதி பெறாமல் அவருக்கு ஆதரவாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
இதுகுறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 127(ஏ)-ன்படி, தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை விளம்பரங்கள் ஆகியவற்றை விளம்பரம் வெளியிடுபவர், அச்சிடுபவர் பெயர், முகவரி இல்லாமல் வெளியிடக் கூடாது.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விளம்பரம், செய்தி வெளியிடப்படும் பத்திரிகைகளுக்கு, அந்த விளம்பரம், தேர்தல் செய்திகளை தருபவர்கள் வெளியிடுபவர் முகவரியை குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் நேரங்களில் வெளியிடப்படும் பத்திரிகை விளம்பரங்களை பொறுத்தவரை, வேட்பாளருக்கு தெரிந்து, அவரிடம் அனுமதி பெற்று வெளியிடப்படும் விளம்பரத்துக்கான தொகையை வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளரின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறாமல் வெளியிடப்பட்டால், வெளியீட்டாளர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 171 (எச்)-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகை களில் வெளியாகும் விளம்பரங்களில் விளம்பரத்தை கொடுத்தவரின் பெயர் இல்லாவிட்டால், அந்த பத்திரிகைகளிடம் விளம்பரம் கொடுத்தவர் குறித்த தகவல்களை பெற்று சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நரேஷ்குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.