அடுத்த ஆண்டு சந்திரனுக்கு சந்திராயன்-1 என்ற செயற்கைகோள் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மின்னணு அறிவியல் பள்ளியின் சார்பாக சென்ஸார் மற்றும் நெட்வொர்க் பற்றிய சர்வதேச கருத்தரங்கை நேற்று துவங்கி வைத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மாதவன் நாயர் பேசுகையில், இந்தியாவில் இருந்து 48 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 7 செயற்கைகோள்கள் மற்ற நாடுகளுடன் இணைந்து அனுப்பப்பட்டு உள்ளது. விண்வெளியில் இருந்து பூமியை படம் எடுப்பது என்பது மிகப்பெரிய விஷயம். தற்போதைய தொழில்நுட்பத்தில் விண்வெளியில் இருந்து ஒரு மீட்டர் விட்டத்தில் உள்ள ஒரு புள்ளியைக் கூட துல்லியமாக படம் எடுக்க முடியும்.
விண்வெளியில் இருந்து படம் எடுப்பது பலவற்றிற்கு பயன்படுகிறது. சமுத்திரத்தில் மீன்கள் எந்த இடத்தில் கூட்டமாக இருக்கின்றன, என்ற தகவலை படம் எடுத்து, அதனை மீனவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் அவர்கள் அந்த இடங்களுக்கு சென்று மீன்கள் பிடிக்க வசதியாக இருக்கும். இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளியில் செயற்கைகோள்களின் கூட்டமே உருவாகும் நிலை உருவாகும்.
தற்போது ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் இருந்துதான் விண்கலம் வாங்கப்பட்டு அதன் மூலம் நம்நாட்டுக்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வாங்கப்படும் விண்கலம் சரியான தொடர்பு கிடைக்காமல் போகின்றன. இதனால் தகவல்களும் சரிவர கிடைப்பதில்லை. எனவே இந்தியாவிலேயே நம்பகத்தன்மையுள்ள ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணி வருகிற 2012-ம் ஆண்டு முடிவடையும்.
அடுத்த ஆண்டு (2008) சந்திரனுக்கு சந்திராயன்-1 என்ற செயற்கைகோள் அனுப்பப்படும். 2015-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் நிலை இந்தியாவில் உருவாகும். 2020-ல் நட்சத்திரங்களில் ஆராய்ச்சி செய்ய செயற்கைக்கோள்கள் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.