இலவசமாக தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி என்பது அத்தியாவசியப் பொருள் அல்ல. அவை இலவசமாக வழங்கப்படுவதும் அதில் முறைகேடு நடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வசதி படைத்தவர்களுக்கும் தொலைக் காட்சி பெட்டி வழங்குவதும், பெட்டிகள் வெளிச்சந்தையில் விற்பனையாவதும் அன்றாடச் செய்திகளாகி விட்டன. இதற்கு என்ன காரணம்?
இதுவரை 1444 கோடி செலவு செய்து 63 லட்சத்து 80 ஆயிரம் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கிறார்கள். இது திட்டமிட்டதை விட 384 கோடி அதிகம் செலவு செய்து 10,80,000 பெட்டிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஸ்டாலின் 163 கோடி மிச்சம் பிடித்ததாக சொல்கிறார். உண்மையில 384 கோடி அதிகம் செலவாகியுள்ளது. இதில் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டிய அம்சங்கள் எவை? நாங்கள் திட்டமிட்டது தவறு அல்லது திட்டமிட்டதை விட கூடுதலாக வழங்கியுள்ளதால் வறுமைக் கோட்டு எல்லைக்கு மேல் உள்ளவர்களுக்கும் வழங்கியிருக்கிறோம் அல்லது நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வறுமைக் கோட்டு எல்லைக்கு கீழே உள்ளவர் எண்ணிக்கை கூடிவிட்டது.
உண்மை என்னவென்றால், இவர்கள் தவறாக திட்டமிட்டார்கள், வறுமைக்கோட்டு எல்லைக்கு வெளியே உள்ளவர்களுக்கும் வழங்கியுள்ளார்கள் என்பதே உண்மை. எனவே தேவையில்லாத பெட்டி சந்தையிலே விற்பனைக்கு வருகிறது. இலவசமாக தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.