நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1000 வழங்காத மத்திய அரசையும் கண்டித்து திருநெல்வேலியில் வரும் 19ஆம் தேதி ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் அதிலும் குறிப்பாக விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள், தொழில் நடத்துபவர்கள் அனைவரையும் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்பட்டுள்ள மின்வெட்டு தாங்க முடியாத அவதிக்கும், இன்னலுக்கும் ஆளாக்கியுள்ளது. ஏற்கனவே தக்க விளைச்சல் இல்லாமல், விளைபொருளுக்கு உரிய விலை இல்லாமல் துயர்படும் விவசாயிகள் இந்த மின்வெட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்திற்கு மிகவும் தேவையான டி.ஏ.பி. உரம் கிடைப்பதில்லை. கள்ளச்சந்தையில் மூட்டைக்கு ரூ.150 முதல் 200 வரை அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய அவலம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த 15 தினங்களில் இந்த உரத்தை பயிருக்கு இட வேண்டும். ஆனால் உரம் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த உரத்தட்டுப்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகளின் நிர்வாக குளறுபடிகளும், முறைகேடுகளுமே காரணமாகும்.
நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் வகையில் குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முன் வராதது தென்னக விவசாயிகளுக்கு செய்யும் பெருங்கேடாகும். மின்வெட்டுக்கும், உரத்தட்டுப் பாட்டுக்கும் காரணமான மாநில அரசையும், நெல்லுக்கு உரிய விலை கொடுக்க முன்வராத மத்திய அரசையும், கண்டித்து டிசம்பர் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.