''தமிழக அரசு கொடுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை விற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்'' என்று சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கியுள்ளது. இடைத்தரகர்கள் சிலர் ஏழை மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். பின்னர் அதை அதிகவிலைக்கு விற்று விடுகின்றனர்.
இது சட்ட விரோதமானது. இது போன்ற சம்பவங்கள் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அசோக் நகர், செரியன்நகர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி அதிக விலைக்கு விற்ற ஒரு பெண் உள்பட 5 பேர் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 7 வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், ஒரு ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. இது போல எழும்பூரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நான்கு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி, விற்கும் இடைத்தரகர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியம் கூறுகையில், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி பெறுபவர்கள் ஒவ்வொருவரும் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டே வாங்குகிறார்கள். அந்த உறுதிமொழியில், ''என்னிடம் கலர் டி.வி. இல்லை, அரசு சார்பில் வாங்கப்படும் இலவச கலர் டி.வியை நான் நல்ல முறையில் பயன்படுத்துவேன். அந்த டி.வியை அடமானம் வைக்கவோ, பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கவோ, விற்பனை செய்யவோ மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன், இதை மீறி நடந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு நான் உட்படுவேன் என்பதை அறிவேன் என்று அந்த உத்தரவாதத்தில் கூறப்பட்டுள்ளது. அரசு டி.வி.யை விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் கூறினார்.