தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் இன்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மலேசியாவில் இருந்து ராஜேந்திரன் தலைமையில் 34 தமிழ் எழுத்தாளர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை வந்தனர். நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தனர். தமிழக அரசும், தமிழறிஞர்களும், பிற நிறுவனங்களும் அளித்த ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
மலேசிய தமிழ் இலக்கிய படைப்புகளை தமிழக மக்கள் அறிந்து கொள்ளவும், தமிழக கலை இலக்கியங்களை தாங்கள் உணர்ந்து கொள்ளவும் இப்பயணம் நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது நிதியமைச்சர் அன்பழகன், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் உடனிருந்தனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.