ஈரோடு அருகே ஒரிச்சேரி பகுதியில் மணல் திருட்டை தடுக்க முயன்ற பவானி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஒரிச்சேரி பகுதியில் பவானியாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க பவானி தாசில்தார் வெங்கடசுப்பிரமணி, தலைமையிடத்து தனித்தாசில்தார் மாதேஸ்வரன், வருவாய் அலுவலர்கள் பத்மநாபன், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரிச்சேரி அருகே மல்லியனூர் காட்டூர் பகுதியில் வண்டி எண் இல்லாத டிராக்டரில் சிலர் பவானியாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்தனர். அதிகாரிகளின் காரை பார்த்ததும் வேகமாக ஓட்டி தப்ப முயன்றனர்.
அதிகாரிகளின் ஜீப் சாலையின் குறுக்கே சென்று டிராக்டரை மறித்து நின்றது. உடனடியாக அதிகாரிகள் சென்ற வாகனத்தின் மீது வேகமாக வந்து மோத முயன்றனர்.
டிராக்டர் வேகமாக வருவதை கவனித்த ஜீப் டிரைவர் வண்டியை சற்று வளைத்து ஓரமாக நிறுத்தினார். கார் மீது மோத வந்த டிராக்டர் நிலைதடுமாறி சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. டிராக்டர் டிரைவர் ஆறுமுகம் குதித்து தப்பி ஓடிவிட்டார். பயந்து போன தாசில்தார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக மற்ற அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பவானி காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டரை மீட்டு பவானி தாலுகா அலுவலகம் எடுத்து வந்தனர். விசாரனையில் மணல் கடத்தியது ஒரிச்சேரி பகுதியைச் சேர்ந்த பாலு என்பதும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பவானியாற்றில் மணல் திருடி விற்பனை செய்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
வாடகைக்கு டிராடக்டர் எடுத்து, வண்டி எண் பலகையை கழற்றி விட்டு இரவு நேரங்களில் மணல் திருடியுள்ளார்.
தற்போது பிடிபட்டுள்ள டிராக்டர், ஜம்பை பெருமாபாளையத்தை சேர்ந்த முத்துக்கவுண்டர் மகன் சண்முகம் என்பவருக்கு சொந்தமானது. இவர் அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு தனது மூன்று டிராக்டர்களை பாலுவுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
மணல் கடத்தலில் பல முறை பிடிபட்டுள்ள பாலு பவானி தாலுகா அலுவலகத்தில் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் செலுத்தியுள்ளார்.
தாசில்தார் கொடுத்த புகாரின்பேரில் இவர் மீது பவானி காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மணல் திருடுவதையே தொழிலாக கொண்டு செயல்படுவது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள பாலு, டிராக்டர் டிரைவர் ஆறுமுகம் ஆகியோரை தேடி வருகின்றனர். பாலு மீது கடும் நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.