''நாட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கூடாது, விமான நிலையத்தை விஸ்தரிக்க கூடாது என்று பேசி வரும் மருத்துவர் ராமதாஸ், தமிழகத்தை காட்டுமிராண்டி காலத்தை போல மாற்ற நினைக்கிறார்'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில், கடலூர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் 1320 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, ஜெயலலிதா ஆட்சியில் ஒப்பந்தம் செய்து, ஏதோ காரணத்துக்காக அத்திட்டம் செயல்படுத்த முடியவில்லை. ஆனால், 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் மின்சார உற்பத்தியை மனதில் கொண்டு அந்த நிறுவனத்திற்கு கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. அந்த நிறுவனம் மின் உற்பத்தி செய்ய உள்ள கிராமங்கள் தியாகவள்ளி, குடிகாடு ஆகிய கிராமங்கள் ஆகும்.
அந்த கிராமங்கள் கடற்கரை ஓரங்களில் உள்ள கிராமங்கள் மட்டுமல்ல, மணல்பாங்கான பூமி. அங்கே ஒரு ஏக்கர் நிலத்தில் கூட யாரும் நெல் உற்பத்தி செய்வதில்லை. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு சொந்தம் என்றும் மருத்துவர் ராமதாஸ் பேசியுள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள உறவு பற்றி பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனிடம் கேட்டால், மருத்துவர் ராமதாசுக்கு உண்மை தெரியும்.
நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடாது, துணை நகரங்கள் அமைக்க கூடாது, விமான நிலையத்தை விஸ்தரிக்க கூடாது, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அனுமதிக்க கூடாது, புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று பேசி வரும் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு காட்டுமிராண்டி காலத்தை போல் மாற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மருத்துவர் ராமதாஸ் மட்டும் ஒரு அறக்கட்டளையை நிறுவி, ஏரிக்கரையின் கீழ் உள்ள 250 ஏக்கர் விளைநிலங்களில் கல்லூரியை கட்டலாம்.
தி.மு.க. ஆட்சியில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி செய்து வரும் சாதனைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அதன் மூலம், மக்களுக்கு தி.மு.க. மீது கோபமும், ஆத்திரமும் ஏற்படவேண்டும் என்பது மருத்துவர் ராமதாசின் தணியாத ஆசை. இந்த ஆசைக்கு யாரும் பலியாக மாட்டார்கள் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.